மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 July 2021 1:58 AM IST (Updated: 10 July 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

கன்னட ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மைசூரு: கன்னட ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

மைசூரு அருகே சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கன்னட ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை, விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். இந்த நாட்களில் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். 

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கன்னட ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் கோவிலில் தேரோட்டமும் நடந்தது. 

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

அதேபோல, இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலையால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தது. தற்போது 2-வது அலையின் தாக்கம் குறைந்துள்ளதால், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனால், இந்த ஆண்டு கன்னட ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆண்டும் கன்னட ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம் என்றும், கன்னட ஆடி வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

சிறப்பு பூஜை

மைசூரு மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், கன்னட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, விசேஷ அபிஷேகங்களும் நடந்தது. அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை கோவில் அர்ச்சகர்கள் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு விசேஷ அலங்காரம் அபிஷேகம், மகா மங்கள ஆரத்தி செய்தனர். இந்த பூஜைகளில் கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 

பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் வைத்து கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதிலும் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மட்டும் கலந்துகொண்டனர். 

பக்தர்கள் ஏமாற்றம்

கன்னட ஆடி மாத முதல் வெள்ளியான நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தனர். ஆனால், மலை அடிவாரத்தில் வைத்தே, போலீசார் பக்தர்களை திருப்பி அனுப்பினார்கள். பக்தர்கள் எவ்வளவு கெஞ்சியும் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. பின்னர் பக்தர்கள், மலை அடிவாரத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனின் பாதத்தில் பூஜை செய்து வணங்கிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் மட்டுமின்றி நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

அரசியல்வாதிகளுக்கு மட்டும் அனுமதி; மக்கள் ஆதங்கம்
கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் சாமுண்டி மலை அடிவாரத்தில் வைத்தே தடுத்து திருப்பி அனுப்பினர். ஆனால், மந்திரி ஈசுவரப்பா, சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா, பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு மட்டும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். பொதுமக்களை அனுமதிக்காமல், முக்கியநபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Next Story