குடும்ப தகராறில் 2 மகள்களை கொன்ற மருத்துவ பிரதிநிதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கோவையில் குடும்ப தகராறில் மகள்களை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மருத்துவ பிரதிநிதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோவை
கோவையில் குடும்ப தகராறில் மகள்களை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மருத்துவ பிரதிநிதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மருத்துவ பிரதிநிதி
கோவை சிங்காநல்லூர் அருகே மசக்காளிபாளையம் நீலிகோனார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 40). மருத்துவ பிரதிநிதி. இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், ஹேமவர்ஷினி (15), ஹர்ஷா (8) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உண்டு. இவர்களுடன் பத்மநாபனின் தாயார் பிரேமா என்பவரும் வசித்து வந்தார்.
பத்மநாபனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்க செல்லாமல் இருந்தார். மேலும் அடிக்கடி மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி குடித்துவிட்டு வந்த பத்மநாதன், தனது மனைவி செல்வ ராணி மற்றும் தாய் பிரேமா ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறில் செல்வராணி, பிரேமா ஆகியோர் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் ஹேமவர்ஷினி, ஹர்ஷா ஆகியோர் இருந்தனர்.
இரட்டை ஆயுள் தண்டனை
இரவில் மகள்கள் தூங்கி கொண்டிருந்தனர். குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்து காணப்பட்ட பத்மநாதன் திடீரென தூங்கிக்கொண்டிருந்த தனது மகள்கள் 2 பேரையும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, 2 மகள்களை கொலை செய்த பத்மநாபனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதில் அரசு தரப்பு வக்கீல் சரோஜினி வாதாடினார்.
Related Tags :
Next Story