போலீஸ் நிலையம் முன்பு தாய்- மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
போலீஸ் நிலையம் முன்பு தாய்- மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன் மகன் ராஜசேகர்(வயது 30). இவர் தா.பழூர் கடைவீதியில் பழக்கடை வைத்துள்ளார். இவருடைய கடைக்கு அருகில் மணி என்பவர் காய்கறி கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக அருகருகே கடை நடத்துவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர்களது கடைக்கு இடையில் உள்ள மண் சுவர் இடிந்து விழுவது போல உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுவர் இடிந்து விழுந்தால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று மணியிடம், ராஜசேகர் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனது இடத்தை ராஜசேகர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கூறி சுவரை இடிக்க மணி மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி தா.பழூர் போலீசில் ராஜசேகர் புகார் கொடுத்துள்ளார். இடப் பிரச்சினை என்பதால் கோர்ட்டு மூலம் தீர்த்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜசேகர், அவரது தாய் சத்யா (51) ஆகியோர் தா.பழூர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று மாலை திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, அவர்களை தடுத்தனர். பின்னர் 2 பேரும் சாலையில் அமர்ந்து கொண்டு எழுந்து வர மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன் பேரில் இருவரும் சாலையில் இருந்து எழுந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story