கிணற்றில் இருந்து, ஊராட்சி தலைவரின் தந்தை பிணமாக மீட்பு


கிணற்றில் இருந்து, ஊராட்சி தலைவரின் தந்தை பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 10 July 2021 2:45 AM IST (Updated: 10 July 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே கிணற்றில் இருந்து ஊராட்சி தலைவரின் தந்தை பிணமாக மீட்கப்பட்டார்.

செந்துறை:

ஊராட்சி தலைவரின் தந்தை
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் காமராஜ். இவரது தந்தை வடிவேல்(வயது 70). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து பின்வாசல் வழியாக அருகே உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே உள்ள கிணற்றில் அவர் தவறி விழுந்துள்ளார்.
இதையறியாமல் நேற்று முன்தினம் காலை காமராஜ் மற்றும் உறவினர்கள் வடிவேலை பல இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் செருப்பு மற்றும் வெற்றிலை பாக்கு பொட்டலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் கிணற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பிணமாக மீட்பு
தண்ணீர் அதிக அளவில் இருந்ததால் அவர்களால், வடிவேலை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த செந்துறை தீயணைப்பு படையினர் அங்கு வந்து, கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் 40 அடிக்கு மேல் உள்ளதால் வடிவேலை மீட்க முடியவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்து விட்டனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தண்ணீர் இறைக்கும் எந்திரத்தின் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை நீண்ட நேரமாக வெளியேற்றினர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், நள்ளிரவில் கிணற்றில் இருந்து வடிவேலை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்கள் 12 மணி நேரத்திற்கு மேலாக வடிவேலின் உடலை மீட்க போராடியது கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தீயணைப்பு வீரர்களுக்கு தண்ணீரில் மூழ்கி உடலை மீட்கும் பயிற்சியும், தண்ணீருக்குள் மூழ்கி உள்ளவற்றை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியும் வசதியையும் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வாக்குவாதம்
இந்நிலையில் வடிவேலின் உடலை மீட்ட பின்னர் நேற்று காலை உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்ய திட்டமிட்டனர். அப்போது அங்கு வந்த இரும்புலிக்குறிச்சி போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து வடிவேலின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். இதனால் கிராம மக்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார், ஆகையால் வழக்குப்பதிவு செய்ய வேண்டாம், உடலையும் கொடுக்க மாட்டோம் என்று போலீசார் கூறினர்.
இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து வடிவேலு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story