ஓமலூர் அருகே காமலாபுரம் பிரிவு ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
ஓமலூர் அருகே காமலாபுரம் பிரிவு ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்:
ஓமலூர் அருகே காமலாபுரம் பிரிவு ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேம்பால பணி
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.சி.செட்டிப்பட்டி, காமலாபுரம் பிரிவுரோடு, பண்ணப்பட்டி பிரிவு ரோடு, தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் விபத்துகள் நடந்து வருகிறது. விபத்துகளை தடுக்கும் வகையில் அந்த பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆனையம் சார்பில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இந்த ஆய்வினை தொடர்ந்து ஆர்.சி.செட்டிப்பட்டி, காமலாபுரம் பிரிவு ரோடு ஆகிய இடங்களில் ரூ.35.66 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் போராட்டம்
இந்த பாலத்தால் தாராபுரம், தாத்தியம்பட்டி, செம்மாண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் சென்று சேலம் செல்லும் பிரதான சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது. ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காமலாபுரம் பிரிவு ரோட்டுக்கு சென்று மேம்பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் தாராபுரம், காமலாபுரம், சக்கரை செட்டிப்பட்டி சாலை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story