நெசவாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி
நெசவாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி அளித்தார்.
அமைச்சர் ஆய்வு
காஞ்சீபுரம் ஓரிக்கையில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலை, காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நெசவு செய்யும் இல்லங்கள் மற்றும் காந்தி சாலையில் உள்ள திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் கருணாநிதி மற்றும் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் மற்றும் வள்ளல் பச்சையப்பன் சாலையிலுள்ள அறிஞர் அண்ணா பட்டு வளாக கட்டிடம் போன்றவற்றை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறைகளை களைவதற்கு...
பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் உள்ள பாதிப்புகள் மற்றும் குறைகளை களைவதற்கு ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலையில் மேற்கொண்ட ஆய்வில் ஏறத்தாழ 3 ஆயிரம் மார்க் சரிகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆலையின் முழு உற்பத்தி திறனான 4,550 மார்க் சரிகை உற்பத்தி செய்ய நடைமுறையில் உள்ள குறைகள் களைய ஏற்பாடு செய்யப்பட்டது.மேலும், ஓரிக்கையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா
குடியிருப்பில் காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வீட்டில் பட்டு சேலை நெசவு செய்வதை பார்வையிட்டேன். அதனை தொடர்ந்து காந்தி சாலையில் உள்ள திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் கருணாநிதி மற்றும் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்களையும் பார்வையிட்டேன். அதன் தொடர்ச்சியாக வள்ளல் பச்சையப்பன் சாலையிலுள்ள அறிஞர் அண்ணா பட்டு வளாக கட்டிடத்தையும் பார்வையிட்டேன்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
மேலும் ஓரிக்கை அறிஞர் அண்ணா குடியிருப்பில் அமைந்துள்ள காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நெசவாளர்களின் வீடுகளுக்கு சென்று பட்டு சேலை நெசவு செய்வதை பார்வையிட்டேன்.மேலும், நெசவாளர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு உகந்த கூலி போன்றவை குறித்து கேட்டறிந்தேன், அவர்களின் கோரிக்கைகள் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மைச்செயலாளர் அபூர்வா, முதன்மை செயலாளர் / கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், கோ-ஆப்-டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் டி.பி.ராஜேஷ், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் எம்.பி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் .க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணை இயக்குநர்கள் கிாிதரன், மகாலிங்கம், துணை இயக்குனர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story