வீ்ட்டு வேலைக்கு சென்றவர்களை அடித்து துன்புறுத்தல்: பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் 3 பெண்கள் மீட்க கோரி போலீசில் உறவினர்கள் புகார்


வீ்ட்டு வேலைக்கு சென்றவர்களை அடித்து துன்புறுத்தல்: பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் 3 பெண்கள் மீட்க கோரி போலீசில் உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 10 July 2021 7:49 AM IST (Updated: 10 July 2021 7:49 AM IST)
t-max-icont-min-icon

பக்ரைன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்றவர்களை அடித்து துன்புறுத்தப்படுவதால், அங்கு தவிக்கும் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 3 பெண்களை மீட்ககோரி போலீசில் அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

திருவொற்றியூர், 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, அருணாச்சல ஈஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த வள்ளி (வயது 35), லட்சுமி கோவிலை சேர்ந்த வடிவுக்கரசி (38), திருவொற்றியூர் டோல்கேட் பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (34) ஆகிய 3 பேரும் கணவரை பிரிந்து, தாய் வீட்டில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தனர்.

போதிய வருமானம் இன்றி குழந்தைகளுடன் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். வடிவுக்கரசியின் உறவினர் கவிதா என்ற பெண் பக்ரைனில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். அவர் பக்ரைனில் வீட்டு வேலைக்கு வந்தால் அதிக சம்பளம் வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

இதை நம்பி வடிவுக்கரசி, தன் தோழிகளான வள்ளி, வேளாங்கண்ணி ஆகியோருடன் சேர்ந்து பக்ரைன் செல்ல முடிவெடுத்தார். இதற்காக நகைகளை விற்று, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் பக்ரைன் நாட்டுக்கு 3 பேரும் வீட்டு வேலைக்கு சென்றனர்.

இந்தநிலையில் வேலைக்கு சென்ற இடத்தில் அவர்களை அடித்து துன்புறுத்துவதுடன், உணவு அளிக்காமல் கஷ்டப்படுத்தி உள்ளனர். எனவே 3 பேரும் தங்களை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என பக்ரைன் நாட்டு ஏஜென்சியில் கேட்டுள்ளனர். அதற்கு, வீட்டு உரிமையாளரும், ஏஜென்சியினரும் ரூ.2 லட்சம் கொடுத்தால் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பக்ரைனில் வீட்டு உரிமையாளர்கள் தங்களை அடித்து கொடுமைப்படுத்துவதாக வள்ளி, சென்னையில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கு ‘வாட்ஸ்அப்’பில் அழுதவாறு வீடியோ அனுப்பினர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரின் உறவினர்களும், பக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள 3 பெண்களையும் மீட்டு தருமாறு வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சிவ பிரசாத்திடம் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, பக்ரைனில் சிக்கியுள்ள பெண்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story