வாணியம்பாடியில் அனுமதியின்றி நடந்த மாட்டுச்சந்தை. அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு


வாணியம்பாடியில் அனுமதியின்றி நடந்த மாட்டுச்சந்தை. அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 July 2021 7:24 PM IST (Updated: 10 July 2021 7:24 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் அனுமதியின்றி மாட்டு சந்தை நடந்தது. இதையறிந்த அதிகாரிகள் மாட்டுச்சந்தையை அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி

மாட்டுச்சந்தை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாட்டு சந்தை இயங்கி வந்தது.
இந்த சந்தைக்கு வாணியம்பாடியை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், பிறமாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள ஆந்திரமாநிலம் பகுதியில் இருந்தும் விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் வந்து தங்கள் மாடுகளை விற்பனை செய்து வந்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாட்டுச்சந்தை மறு உத்தரவு வரும் வரை இயங்க அரசு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

சமூக இடைவெளி இல்லாமல்

இந்த நிலையில் நகராட்சி அனுமதி அளிக்காமல் நேற்று திடீரென்று மாட்டுச்சந்தை நடந்தது. இதில் வாணியம்பாடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள்,  500-க்கும் மேற்பட்டோர் கூட்டம், கூட்டமாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமல்  விற்பனையில் ஈடுபட்டனர்.

கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் இது போன்று கூட்டம், கூட்டமாக கூடி விற்பனையில் ஈடுபடுவது, மீண்டும் தொற்று அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது. 
அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்

மேலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பைபாஸ் சாலையை வாகனங்கள் ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை போலீசார் விரைந்து வந்து மாட்டு சந்தையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் வியாபாரிகளை கலைந்து போக செய்தனர். 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story