மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் மூலம் தீர்வு காணப்படும். மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
மக்கள் நீதிமன்றத்தை அணுகுபவர்களுக்கு வெற்றியும், தோல்வியும் கிடையாது. சமரசம் மூலம் தீர்வு காணப்படும், என மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தெரிவித்தார்.
வேலூர்
தேசிய மக்கள் நீதிமன்றம்
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தலைமை தாங்கினார். மக்கள் நீதிமன்ற தலைவர் அருணாச்சலம் மற்றும் நீதிபதிகள் பலர் முன்னிலை வகித்தனர். மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்ட வழக்குகளுக்கு, இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
அந்த உத்தரவு ஆணையை பயனாளர்களுக்கு முதன்மை நீதிபதி வசந்தலீலா வழங்கி பேசியதாவது:-
மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு மேல்முறையீடு தேவை இல்லை. கோர்ட்டில் செலுத்தப்பட்ட கட்டணங்கள் திரும்ப பெறும் வசதி உள்ளது. மக்கள் நீதிமன்றத்தை அணுகுபவர்களுக்கு வெற்றியும், தோல்வியும் கிடையாது. இரு தரப்பினருக்கும் சமரசம் மூலம் தீர்வு காணப்படும்.
எனவே பொதுப் பயன்பாடு தொடர்பான பிரச்சினைகளை சட்டப்பணிகள் ஆணைக் குழுவை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இங்கு பாகுபாடு இல்லாமல் சமரசம் மூலம் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இழப்பீடு ஆணை
மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளின் விவரம் வருமாறு:-
ரத்தினகிரி, டி.சி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 46). விவசாயி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மேல்விஷாரம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து ஏழுமலையின் மனைவி கலையரசி மற்றும் ஏழுமலையின் பெற்றோர் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது. ஏழுமலையின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
பெண் குடும்பத்துக்கு...
இதேபோல காட்பாடி தாலுகா, தாராபடவேடு குளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (44). இவரது மனைவி சுபத்ரா (39). இவர் சம்பவத்தன்று ரேணிகுண்டா- சங்ககிரி சாலையை தனது 2 குழந்தைகளுடன் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் இவர்கள் மீது மோதியது. அதில் சுபத்ரா உயிரிழந்தார். இரு குழந்தைகள் காயமடைந்தனர்.
இதையடுத்து வேலூர் கோர்ட்டில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு மஞ்சுநாதன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ.11 லட்சம் காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவிடப்பட்டது.
2,397 வழக்குகளுக்கு தீர்வு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 11 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதில் 7,170 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2,397 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.5 கோடியே 38 லட்சத்து 76 ஆயிரத்து 493 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
Related Tags :
Next Story