வால்பாறையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
வால்பாறையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
வால்பாறை
வால்பாறை பகுதியில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை விட்டு, விட்டு பெய்து அணைகளுக்கும், ஆறுகளுக்கும் தண்ணீர் வரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய கனமழை வால்பாறை வட்டார பகுதி முழுவதும் பெய்து வருகிறது. விடிய, விடிய கனமழையாக பெய்து வருகிறது.
இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் 109.56 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக 72 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட சோலையார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வால்பாறை கூழாங்கல் ஆற்று பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் வனப்பகுதிகளுக் குள்ளிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 70 மி.மீ.மழையும், மேல்நீராரில் 91 மி.மீ.மழையும், நீராரில் 65 மி.மீ.மழையும், சோலையார் அணையில் 45 மி.மீ.மழையும் பெய்துள்ளது. சோலையார் மின் நிலையம் -1 இயக்கப்பட்டு 410 கன அடித்தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படுகிறது.
சோலையார் மின்நிலையம் -2 இயக்கப்பட்டு 454 கன அடித் தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு விநாடிக்கு 874 கன அடித் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலை நீடித்தால் இந்த ஆண்டு சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை அடைவதற்கு வாய்ப்புள்ளது.
Related Tags :
Next Story