பெண்கள், குழந்தைகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து செய்ய வேண்டாம்
புகார்களை நேரில் சென்று விசாரிக்க வேண்டும் எனவும், பெண்கள், குழந்தைகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பஞ்சாயத்து செய்ய வேண்டாம் எனவும் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட போலீஸ்துறை சார்பில் பெண்கள் உதவி மையம் தொடக்கவிழா தஞ்சையில் நேற்று காலை நடந்தது. விழாவிற்கு போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி பெண்கள் உதவி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
பெண்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கவும், தேவைப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், மனநல ஆலோசனை வழங்கவும் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்திற்காக சமூகநலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருடன் இணைந்து போலீசார் பணியாற்ற வேண்டும். பெண்கள், குழந்தைகள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் எளிதில் தீர்வு காண முடியும். போலீஸ் நிலையத்திற்கு பெண்கள், குழந்தைகளை வரவழைத்து பஞ்சாயத்து செய்ய வேண்டாம்.
அவர்களது இருப்பிடத்திற்கு நேரில் சென்று விசாரித்தால் 10 நிமிடத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். பிரச்சினைக்கான உண்மையான காரணமும் உங்களுக்கு தெரிய வரும்.
புகார் செய்தேன், போலீசார் புகாரை வாங்கவில்லை. வழக்குப்பதிவு செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் எதுவும் என்னிடம் வரக்கூடாது. பெண்கள், குழந்தைகள் பிரச்சினைக்கு சட்டப்படி தீர்வு காண வேண்டும். மாவட்ட போலீஸ்துறைக்கு நல்லபெயரை வாங்கி கொடுக்க வேண்டும்.
உங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்து தர தயாராக உள்ளோம். மாதம் ஒருமுறை பயிற்சி அளிக்கப்படும். கணினி தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜேஸ்வரி, மகளிர் திட்ட உதவி அலுவலர் சரவணபாண்டியன், தொழிலாளர்துறை உதவி ஆணையர் தனபாலன், சைல்டு லைன் நிர்வாக இயக்குனர் பாத்திமாராஜ் ஆகியோர் பெண்கள் உதவி மையத்தில் பணியாற்றக்கூடிய போலீசாருக்கு பயிற்சி வழங்கினர்.
Related Tags :
Next Story