தேனி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 710 வழக்குகளுக்கு தீர்வு
தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 710 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட செசன்சு நீதிபதி விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாவுதீன், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சுந்தரம், சார்பு நீதிபதி சுந்தரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சித்ரா மற்றும் நீதிபதிகள், அரசு கூடுதல் வக்கீல் வெள்ளைச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பெரியகுளம் கோர்ட்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி திலகம் முன்னிலையிலும், உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி கன்னியாதேவி முன்னிலையிலும், ஆண்டிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ் முன்னிலையிலும், போடியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி உம்முல் பரிதா முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்த வழக்குகள், வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 710 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம், ரூ.11 கோடியே 1 லட்சத்து 59 ஆயிரத்து 588-க்கு தீர்வு ஏற்பட்டன. தீர்வு காணப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழக்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டன.
தேனி கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், விவாகரத்து தொடர்பாக நிலுவையில் இருந்த ஒரு வழக்கில், கணவன், மனைவி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் அந்த தம்பதியினர் கருத்து வேறுபாடுகளை மறைந்து மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அந்த தம்பதிக்கு நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story