ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
நாகையில், ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகையில், ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
நாகை மருந்து கொத்தளரோடு கொடிமரத்து சந்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). ஆட்டோ டிரைவரான இவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று இவரது வீட்டின் மாடியில் உள்ள தனது அறையில் பிரகாஷ் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நாகை டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் விசாரணை
இந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-
மது குடித்தனர்
பிரகாஷ் நண்பரான மருந்து கொத்தள ரோடு காலனி தெருவை சேர்ந்த ஆனந்த்(27), தனது நண்பர்களான நாகையை அடுத்த பாப்பாகோவில் புதிய கல்லார் பகுதியை சேர்ந்த சூர்யா(24), நாகை வ.உ.சி. தெருவை சேர்ந்த சிவபவித்ரன்(24) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் வீட்டுக்கு அழைத்து வந்து மது குடித்து உள்ளார்.
அப்போது பிரகாஷ், எனது வீட்டிற்கு புதிய கல்லார் பகுதியில் இருந்து வந்த சூர்யாவை எதற்காக அழைத்து வந்தாய்? என கேட்டு சிவபவித்ரனை அடித்ததாக தெரிகிறது.
3 பேர் கைது
அப்போது ஏற்பட்ட தகராறில் பிரகாசை அங்கிருந்த ஆனந்த், சூர்யா, சிவபவித்ரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அரிவாளால் முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டி கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் ஆனந்த், சூர்யா, சிவபவித்ரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மருந்து கொத்தளம் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உறவினர்கள் சாலை மறியல்
இந்த நிலையில் பிரகாஷ் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பிரகாஷ் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து நாகை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story