ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி; சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்


ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி; சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 10 July 2021 10:08 PM IST (Updated: 10 July 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசாருக்கான பயிற்சியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசாருக்கான பயிற்சியை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்.

போலீசாருக்கு பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக மைதானத்தில் நேற்று நடந்தது. பயிற்சிக்கு ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் போலீசாரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். மேலும் ஆயுதப்படை போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அவற்றை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நல்ல ஒழுக்கம்

பின்னர் அவர் பேசியதாவது:-
போலீசாராகிய நாம் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாம் எல்லோரும் நல்ல ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் தாலுகா போலீசாராக நியமிக்கப்பட்டு பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
சென்ற வருடத்தில் மட்டும் ஒரு முறை 140 காவலர்களும், மற்றொரு முறை 130 காவலர்களும் தாலுகா போலீசாராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப சுமார் 50 ஆயுதப்படை போலீசார், விரைவில் தாலுகா போலீசாராக நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன், ஆயுதப்படை துணை சூப்பிரண்டு கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உள்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story