படைப்புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறை
மக்காச்சோளத்தில் படைப்புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று வேளாண்மைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
போடிப்பட்டி
மக்காச்சோளத்தில் படைப்புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று வேளாண்மைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்காச்சோள சாகுபடி
உடுமலை வட்டாரத்தில் மானாவாரி மற்றும் இறவையில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இங்கு சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மக்காச்சோளம் சாகுபடியை விவசாயிகள் தொடங்கவுள்ளனர். இந்தநிலையில் படைப்புழுக்கள் தாக்குதல் குறித்த அச்சத்தால் மக்காச்சோளம் சாகுபடி செய்யத் தயங்கும் விவசாயிகளுக்கு வழிகாட்டும் வகையிலும், மக்காச்சோள சாகுபடிப் பரப்பளவை அதிகரிக்கும் நோக்கத்திலும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
‘படைப்புழுக்களில் பல்வேறு வகைகள் உள்ளது. மக்காச்சோளப்பயிரில் சேதம் உருவாக்கும் ஸ்போடோபீரா ப்ரூஜிபெர்டா வகை தாய் அந்துப்பூச்சி பயிரின் அடிப்பாகத்தில் ஒரே நேரத்தில் 100 முதல் 200 முட்டைகளை குவியலாக இட்டு வெண்மை நிற செதில்களால் பாதுகாப்பாக மூடிவிடும். ஒரு தாய் அந்துப்பூச்சி தன் வாழ்நாளில் 1500 முதல் 2000 முட்டைகள் வரை இடும்.
வேப்பம்புண்ணாக்கு
முட்டையிலிருந்து வெளிவரும் இளம்புழுக்கள் கருப்பு தலையுடன் பச்சை நிறமாக காணப்படும். இந்த புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சேதப்படுத்துவதால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாக மாறுகிறது. மேலும் இலையுறையினுள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இளம் கதிர்களையும் சேதப்படுத்துகிறது. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதுடன் பெருமளவு மகசூல் இழப்பையும் தவிர்க்கலாம்.
அதன்படி ஒரு பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் அனைவரும் ஒரே நேரத்தில் சாகுபடி செய்யலாம். இதன்மூலம் புழுக்களுக்குத் தொடர்ச்சியாக உணவு கிடைப்பதைத் தவிர்க்கலாம். கோடை உழவு செய்வதுடன் கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இடுவதன் மூலம்மண்ணில் மறைந்துள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். மேலும் ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறிகளை செடிகளை விட அதிக உயரத்திலோ தாழ்வாகவோ வைக்காமல் செடிகளின் உயரத்தில் வைக்க வேண்டும். அத்துடன் 3 வாரங்களுக்கு ஒருமுறை அதன் உள்ளிருக்கும் குப்பியை கைகளால் தொடாமல் மாற்ற வேண்டும்.
வரப்புப்பயிர்
மேலும் தட்டைப்பயறு, எள், சூரியகாந்தி போன்றவற்றை வரப்புப்பயிராக 3 வரிசையில் மக்காச்சோளம் விதைக்கும் நாளிலேயே விதைக்க வேண்டும். இதன்மூலம் படைப்புழுக்களை தின்னக்கூடிய ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் அதிக அளவில் உற்பத்தியாகும். மேலும் மக்காச்சோள வயலைச்சுற்றி சோளம், நேப்பியர் புல் போன்றவற்றை 3 வரிசை சாகுபடி செய்யலாம்.அத்துடன் படைப்புழுக்களுக்குப் பிடிக்காத திரவங்களைச் சுரக்கும் வேலி மசாலை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
மேலும் தயோமீதாக்ஸம் 19.8 சதவீதம் மற்றும் சையண்ட்ராணிப்ரோல் 19.8 சதவீதம் எப்எஸ் ஆகியவற்றை ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி என்ற அளவில் 15 மி.லி தண்ணீரில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்பதன் மூலம் பயிரின் முதல் 20 நாட்களில் காணப்படும் படைப்புழுக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெற்று, ஒழுங்குமுறைக்கூடத்தில் இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம்'.
இ்வ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story