மனமகிழ் மன்ற வளாகத்தில் இன்று முதல் கொரோனா பரிசோதனை


மனமகிழ் மன்ற வளாகத்தில் இன்று முதல் கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 10 July 2021 10:27 PM IST (Updated: 10 July 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை மனமகிழ் மன்ற வளாகத்தில் இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

உடுமலை
உடுமலை மனமகிழ் மன்ற வளாகத்தில் இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 
மனமகிழ் மன்றம்
உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனை ஆகியவற்றிற்காக வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கூட்டத்தை சமாளிக்கும் பொருட்டு கூடுதல் இடவசதிக்காக, இந்த அரசு மருத்துவமனைக்கு மிக அருகில், உடுமலை மனமகிழ் மன்றத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் இடத்தை பயன்படுத்த அரசு துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதன்படி  தாசில்தார் வி.ராமலிங்கம், நகராட்சி ஆணையாளர் தே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் மனமகிழ் மன்றத்திற்கு சென்றனர். அவருடன் நகரமைப்பு ஆய்வாளர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். மேலும்   போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் உடுமலை மனமகிழ் மன்றத்தினரும் அங்கு வந்திருந்தனர். அதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
அப்போது வருவாய்துறையினர், மனமகிழ் மன்றத்தினரிடம் பேசும்போது, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி அந்த இடம் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மனமகிழ் மன்ற வளாகத்தின் பிரதான நுழைவு வாயில் வழியாக அரசு துறை அதிகாரிகள் உள்ளே சென்றனர்.  இதைத்தொடர்ந்து மனமகிழ் மன்ற வளாகத்தில் கார்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது.அங்கு நகராட்சி நகர்நல அலுவலர் க.கவுரி சரவணன் மேற்பார்வையில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவினர்.
இன்று முதல் பரிசோதனை
இதைத்தொடர்ந்து உடுமலை அரசு மருத்துவமனை பணியாளர்கள் மனமகிழ் மன்றத்திற்கு வந்தனர். அரசு மருத்துவமனை ஆம்புலன்சுகளும் இந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. உடுமலை மனமகிழ் மன்ற வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story