தரமில்லாத 350 மூட்டை ரேஷன் அரிசி வினியோகிக்க தடை
செஞ்சியில் தரமில்லாததால் 350 மூட்டை ரேஷன் அரிசி வினியோகிக்க தடை விதித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டார்.
செஞ்சி,
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று காலை திடீரென ஆய்வு செய்தார். அப்போது, சீட்டு போட்ட கொட்டகைகள், புதியதாக கட்டப்பட்ட குடோன்களில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருப்பதும், இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைத்து எடை போடுவதால் மழையில் நனைந்து வீணாவதையும் அறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், அதிகாரிகளை கண்டித்தார்.
மேலும் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் எடுத்துச்செல்ல வேண்டும் எனவும், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை குடோனில் வைத்துதான் எடைபோட்டு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
தரமில்லாத அரிசி
இதனை தொடர்ந்து செஞ்சியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ரேஷன் கடைக்கு அனுப்பி வைப்பதற்காக வைத்திருந்த பொருட்களை பார்வையிட்டார்.
ஒரு அரிசி மூட்டையை பிரித்து பார்த்தபோது, அவை தரமின்றி இருந்தது. இதேபோல் 350 மூட்டை ரேஷன் அரிசி தரமில்லாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், தரமில்லாத 350 மூட்டை அரிசியை ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்க தடை விதித்தார்.
மேலும் தரமான அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அங்கு இருந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் செஞ்சி விஜயகுமார், மேல்மலையனூர் நெடுஞ்செழியன், வழக்கறிஞர் பிரிவு மணிவண்ணன், அனையேரி ரவி மற்றும் நிர்வாகிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story