போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு


போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு
x
தினத்தந்தி 10 July 2021 10:51 PM IST (Updated: 10 July 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே போலி டாக்டரிடம் சிகிச்சைபெற்ற முதியவர் இறந்தார். இது பற்றி போலீசில் புகார் கொடுக்க அவரது உடலுடன் உறவினர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கர்ணாவூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 70). இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டால் ஆலப்பாக்கம் மெயின் ரோடு டி.எம்.ஜி. நகரில் வசிக்கும் மணிகண்டன் என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 
இந்த நிலையில் நேற்றும் உடல் நலம் சரியில்லாததால் ஆறுமுகம், தனது வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விட்டு மணிகண்டனிடம் சிகிச்சைபெற சென்று உள்ளார். அப்போது மணிகண்டன், ஆறுமுகத்துக்கு ஊசி போட்டு, மாத்திரைகளை கொடுத்தார். அங்கிருந்து நடந்து சென்ற ஆறுமுகத்தின் வாயில் இருந்து ரத்தம் வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்த அவர், துடிதுடித்து இறந்தார். 

போலி டாக்டர் கைது 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், ஆறுமுகத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உறவினர்கள் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். இதையடுத்து ஆறுமுகத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் எம்.பி.பி.எஸ். படிக்காமல் வீட்டில் ஒரு தனி அறையில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி டாக்டரான மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். 

சீல் வைப்பு 

மேலும் சுகாதாரத்துறையினர் மணிகண்டனின் வீட்டிற்கு சென்று ஒரு அறையில் அதிரடி சோதனை நடத்தினர். 
அங்கு இருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. 
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story