காலாவதியான குளுக்கோஸ் செலுத்தியதால் முன்னாள் தாசில்தார் சாவு?-அமைச்சரிடம் புகார்


காலாவதியான குளுக்கோஸ் செலுத்தியதால் முன்னாள் தாசில்தார் சாவு?-அமைச்சரிடம் புகார்
x
தினத்தந்தி 10 July 2021 10:52 PM IST (Updated: 10 July 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

காலாவதியான குளுக்கோஸ் செலுத்தியதால் முன்னாள் தாசில்தார் இறந்ததாக அமைச்சரிடம் அவரது மகன் புகார் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,
சிவகங்கை முத்து நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் தனது தாயாருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
என்னுடைய தந்தை ராமதாஸ் (வயது 73), தாசில்தாரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். உடல்நலக்குறைவு காரணமாக அவரை சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் 21-ந் தேதி சிகிச்சைக்கு சேர்த்தோம். 24-ந் தேதியன்று அவருக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். அதை ஏற்றிக்கொண்டிருக்கும் போது, எதேச்சையாக நான் அந்த குளுக்கோஸ் மருந்து பாட்டிலை பார்த்தேன். அப்போது அது காலாவதியாகி விட்டதை தெரிந்துகொண்டேன்.
இதுகுறித்து பணியிலிருந்த செவிலியர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறி சென்றுவிட்டார்கள். இது குறித்து நான் உடனடியாக மருத்துவ கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தேன்.
இந்நிலையில் காலாவதியான மருந்து ஏற்றப்பட்டதை அறிந்த என்னுடைய தந்தை உயிர் பயத்தில் மன உளைச்சலுடன் இருந்தார். கடந்த 27-ந் தேதி அன்று அவர் இறந்துவிட்டார்.
எனவே என்னுடைய தந்தைக்கு காலாவதி குளுக்கோஸ் மருந்தை உடலில் செலுத்தி அவருக்கு மனதளவிலும் உடல் அளவிலும் துன்புறுத்தலை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
 மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Related Tags :
Next Story