வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்


வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்
x
தினத்தந்தி 10 July 2021 11:10 PM IST (Updated: 10 July 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சிப்பாய் புரட்சி தூணுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

வேலூர்

சிப்பாய் புரட்சி

இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நம்நாட்டில் உள்ள செல்வ செழிப்புகளை கண்டும் நமது நாட்டு மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தியும் நாட்டை கைப்பற்றி ஆள முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தியர்களை அடிமைப்படுத்தி சுமார் 150 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். 

அந்த சமயத்தில் ஆங்கிலேய படையில் இந்திய வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். ஆங்கிலேய அதிகாரிகள், இந்திய வீரர்களிடம் சமய அடையாளத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், ஐரோப்பிய ராணுவ உடைகளை தான் அணிய வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இது வேலூர் கோட்ைடயில் இருந்த 1,500 இந்து, முஸ்லிம் வீரர்களை கோபமடைய செய்தது. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெகுண்டெழுந்தனர்.

இதனைத்தொடர்ந்து 1806-ம் ஜூலை மாதம் 10-ந் தேதி அதிகாலையில் பல ஆங்கிலேய அதிகாரிகள் படுக்கையிலேயே கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளைக் கொன்று குவித்து வந்தனர். எனினும் பதில் தாக்குதலில் இந்திய வீரர்கள் ஏராளமானவர்கள் வீரமரணமடைந்தனர். 

பலர் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட இந்தியத் சிப்பாய்கள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டு ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த போராட்டம், முதல் இந்திய சுதந்திர போருக்கு விதித்திட்ட புரட்சியாகும். 
இந்த புரட்சியில் இறந்த ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஜூலை 10-ந் தேதி சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

வீரர்களுக்கு மரியாதை

சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக வேலூர் கோட்டை அருகே மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10-ந் தேதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 215-வது சிப்பாய் புரட்சி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் செந்தில்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Next Story