தர்மபுரியில் ஓய்வுபெற்ற பெண் அரசு ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது
தர்மபுரியில் ஓய்வுபெற்ற பெண் அரசு ஊழியரிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மனைவி நாமகிரி (வயது 60). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் நாமகிரியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தர்மபுரி டவுன் பஸ் நிலையப் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த சேலம் அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கண்ணன் (36) என்பவருடன் சேர்ந்து நாமகிரியிடம் நகை பறித்து சென்ற தெரிய வந்தது. இதையடுத்து நல்லம்பள்ளி பகுதியில் கண்ணனை போலீசார் பிடித்தனர்.
மேலும் இவர்கள் அதியமான்கோட்டை பகுதியில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து நகை பறிப்பில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story