வேளாண் துறை வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தர்மபுரி:
வளர்ச்சி திட்டப்பணிகள்
தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி வெள்ளாளப்பட்டி கிராமத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தில் கரும்பு திடல், பி.மோட்டுபட்டி கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றி பயிர் சாகுபடி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகளுடன், பயிர் சாகுபடி முறைகள் குறித்தும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடினார். தொடர்ந்து அரியகுளம் கிராமத்தில் சாகுபடி செய்யப்படும் பல்வேறு ரக பேரீச்சை மரங்கள் நடவு மற்றும் சாகுபடி கலெக்டர் பணியை பார்வையிட்டார்.
நீர் சேமிப்பு குட்டை
தெள்ளனஅள்ளி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட நீர் சேமிப்பு குட்டை, பந்தல் சாகுபடி முறையில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்ட வயல் ஆகியவற்றை பார்வையிட்ட கலெக்டர், உற்பத்தியை மேலும் அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கூடுதல் வருவாய் ஈட்ட ஒருங்கிணைந்த முறையில் கோழி வளர்ப்பு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
பின்னர் வேளாண் பொறியியல் துறை மூலம் சூரிய மின் சக்தியால் இயங்கும் ஆழ்துளை கிணற்றின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர் பாசன திடலை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, வேளாண் துணை இயக்குனர்கள் சிவசங்கர் சிங், ஜெயபாலன், பூவண்ணன், உதவி இயக்குனர் தேன்மொழி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் சசிகலா, கலைவாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story