தேசிய ஊரக தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்


தேசிய ஊரக தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 July 2021 1:08 AM IST (Updated: 11 July 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே தேசிய ஊரக தொழிலாளர்கள் வேலை கேட்டு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பஞ்சாயத்து அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே தேசிய ஊரக தொழிலாளர்கள் வேலை கேட்டு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பஞ்சாயத்து அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

சாலைமறியல் 

திருவேங்கடம் அருகே குருவிகுளம் யூனியன் கலிங்கப்பட்டி பஞ்சாயத்தில் தேசிய ஊரக தொழிலாளர்கள் நேற்று அங்குள்ள பெரியகுளம் நீர்வரத்து ஓடையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பஞ்சாயத்து செயலாளர், தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு தற்போது பணி வழங்கப்படவில்லை. எனவே வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தேசிய ஊரக தொழிலாளர்கள், திருவேங்கடம்-ராஜபாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

உடனே கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், பஞ்சாயத்து செயலாளர் உள்ளிட்டவர்கள் விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்பட்டதால், சாலைமறியலை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை

இதற்கிடையே தேசிய ஊரக தொழிலாளர்களில் சிலர், கலிங்கப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், யூனியன் அதிகாரிகள் பல்வேறு கெடுபிடிகளை விதிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தேசிய ஊரக தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். தேசிய ஊரக தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Next Story