கரூரில் கிளி பிடிக்க சென்ற இடத்தில் மது வாங்கி குடித்த வாலிபர் சாவு
கரூரில் கிளி பிடிக்க சென்ற இடத்தில் மது வாங்கி குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரூர்
மதுகுடித்த நண்பர்கள்
கரூர் காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (28). இவர்கள், தங்களது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கிளி பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
இதையடுத்து மோகன் மற்றும் சசிகுமார் வேண்டுகோளின்படி அவர்களுக்கு நண்பர் ஒருவர் மது வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து மோகன் பிராந்தியும், சசிகுமார் பீரையும் குடித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மோகன் வயிறு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார், சசிகுமார் அதிகமாக வாந்தி எடுத்துள்ளார்.
வாலிபர் சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மோகன், சசிகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக இறந்தார். சசிகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணை
இதையடுத்து மது வாங்கி கொடுத்த மோகனின் நண்பர் ஒருவரை பிடித்து கரூர் பசுபதிபாளையம் போலீசார் விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், காந்திகிராமம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து கொடுத்ததாகவும், வீட்டில் ஒரு பையில் இருந்த மதுவை எடுத்து வந்து கொடுத்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து மோகனின் இறப்பு குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story