தமிழக எல்லையில் ஜிகா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை


தமிழக எல்லையில் ஜிகா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
x
தினத்தந்தி 11 July 2021 1:35 AM IST (Updated: 11 July 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட பெண் குமரியை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குமரி எல்லையில் ஜிகா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகர்கோவில், 
கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட பெண் குமரியை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குமரி எல்லையில் ஜிகா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜிகா வைரஸ் பாதிப்பு
குமரி மாவட்ட எல்லையையொட்டி அமைந்துள்ள கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
அந்த பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருடைய சொந்த ஊர் குமரி மாவட்டம் பளுகல் பகுதியாகும். கணவர் வீடு பாறசாலையில் உள்ளது.  பிரசவத்திற்கு முன்பு அவர் பளுகல் பகுதியில் தங்கி இருந்ததாகவும் தெரிகிறது.
குமரி மக்கள் அதிர்ச்சி
இந்த பெண்ணை தொடர்ந்து கேரளாவில் மேலும் சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிய வைரஸ் தொற்று அண்டை மாநிலமான கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், பாதிப்புக்கு ஆளான பெண்ணின் ஊர் குமரி மாவட்ட பகுதியாக இருப்பதால் குமரி மாவட்ட மக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த வைரஸ் டெங்கு நோயை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவக்கூடியது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குமரி எல்லையில் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு, வீடாக சென்று ஆய்வு நடக்கிறது. டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களே இந்த பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
கலெக்டர் நேரில் ஆய்வு
அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஜிகா வைரஸ் அறிகுறிகள் யாருக்காவது இருக்கிறதா? என எல்லை கிராம பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவுபடி நேற்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஆகியோருடன் தமிழக எல்லையான பளுகல் பகுதியில் ஜிகா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
டெங்கு நோயை பரப்பக்கூடிய ஏடிஸ் வகை கொசுக்கள் தான் சில வைரஸ் நோயையும் பரப்புகிறது. எனவே பளுகல் பேரூராட்சி பகுதியில் நேற்று புகை மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பாதிப்பு இல்லை
குமரி மாவட்டத்தில் இதுவரை ஜிகா வைரஸ் தொடர்பான காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் இல்லை. அத்தகைய அறிகுறிகளுடன் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். குமரி-கேரள எல்லைப்பகுதியில் கொரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story