கர்நாடகத்தில் போலி டாக்டர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் போலி டாக்டர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் போலி டாக்டர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
போலி டாக்டா்கள் மீது நடவடிக்கை
கர்நாடகத்தில் போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகாித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதையடுத்து, போலி டாக்டர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை மிக குறைவாகும்.
ஆனாலும் மாநிலத்தில் போலி டாக்டர்கள், கிளினிக்குகளை தொடங்கி மக்களை ஏமாற்றி மருந்துகள், மாத்திரைகள் வழங்கி வருவது பற்றி அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து, போலி டாக்டர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், போலி டாக்டர்களின் கிளினிக்குகளில் சோதனை நடத்தவும் அதிகாரிகளுக்கு உததரவிட்டுள்ளேன். போலி டாக்டர்கள் பற்றி எந்த புகார்கள் வந்தாலும், அதனை நிராகரிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
அதிகாரிகளுக்கு அதிகாரம்
போலி டாக்டர்களுக்கு கடிவாளம் போடவும், அவர்களின் அட்டூழியத்தை ஒடுக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலில் விண்ணப்பித்து முறையாக அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கிளினிக் நடத்த வேண்டும். போலி கிளினிக் நடத்தும் டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. அதில் எந்த விதமான பாரபட்சமும் காட்டப்படாது. மக்களை ஏமாற்றி மோசடி செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது.
நாட்டில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் 25 சதவீதம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கும், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இடையே சில பிரச்சினைகள் காரணமாக தற்போது 8 முதல் 10 சதவீதம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு மந்திரி சுதாகா் கூறினார்.
Related Tags :
Next Story