தாவர்சந்த் கெலாட் பெங்களூரு வருகை


தாவர்சந்த் கெலாட்.
x
தாவர்சந்த் கெலாட்.
தினத்தந்தி 11 July 2021 2:05 AM IST (Updated: 11 July 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநில புதிய கவர்னராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்க இருப்பதால், தாவர்சந்த் கெலாட் நேற்று பெங்களூருவுக்கு வருகை தந்தார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

பெங்களூரு: கர்நாடக மாநில புதிய கவர்னராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்க இருப்பதால், தாவர்சந்த் கெலாட் நேற்று பெங்களூருவுக்கு வருகை தந்தார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

புதிய கவர்னர் பதவி ஏற்பு

கர்நாடக மாநில கவர்னராக இருந்து வருபவர் வஜூவாய் வாலா. கடந்த 6½ ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கவர்னர் பதவியில் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடகத்திற்கும் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். அதாவது மத்திய மந்திரியாக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

கர்நாடகத்தில் தற்போதைய கவர்னராக இருந்து வரும் வஜூபாய் வாலா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, கர்நாடகத்தின் 19-வது கவர்னராக தாவர்சந்த் கெலாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் புதிய கவர்னரான தாவர்சந்த் கெலாட்டுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

பெங்களூரு வந்தார்

இந்த நிலையில், புதிய கவர்னராக பதவி ஏற்க இருப்பதால் நேற்று மதியம் 1.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக தாவர்சந்த் கெலாட் தன்னுடைய குடும்பத்துடன் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் வைத்து அரசு அதிகாரிகள், ராஜ்பவன் அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு ராஜ்பவனுக்கு தாவர்சந்த் கெலாட் அழைத்து வரப்பட்டுள்ளார்.

பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறும் புதிய கவர்னர் பதவி ஏற்பு விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். கர்நாடக மாநில கவர்னராக 6½ ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த வஜூபாய் வாலா இன்றுடன் விடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story