எனக்கு எதிராக பா.ஜனதாவினர் சதி; முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி குற்றச்சாட்டு
எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா விவகாரத்தில் அரசியல் இல்லை என்றும், எனக்கு எதிராக பா.ஜனதாவினர் 3 பேர் சதி செய்திருப்பதாகவும் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா விவகாரத்தில் அரசியல் இல்லை என்றும், எனக்கு எதிராக பா.ஜனதாவினர் 3 பேர் சதி செய்திருப்பதாகவும் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.
பெலகாவி மாவட்டம் கோகாக்கில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது-
சொந்த காரணங்களுக்காக...
என்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய நினைத்தது உண்மை தான். அதற்கு நான் தயாராகவும் இருந்தேன். சில காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு உள்ளேன். அது முடிந்து போன விஷயமாகும். அந்த விவகாரம் பற்றி விரிவாக பேசுவேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் விவகாரத்தில் நான் அரசியல் செய்வதாக சிலர் கூறி வருகிறார்கள்.
அது உண்மை இல்லை. என்னுடைய சொந்த காரணங்களுக்காக தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தேன். அரசியல் பிரச்சினைகளால் அந்த முடிவை எடுக்கவில்லை. நான் மந்திரி பதவிக்காக யாரையும் சந்தித்து பேசவில்லை. என்னுடைய சொந்த விவகாரங்கள் குறித்து தான்பேசி வருகிறேன்.
பா.ஜனதாவினர் 3 பேர் சதி
காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், என்னுடைய அரசியல் எதிரி. அவருக்கு எதிராக எந்த சவால்களையும் எதிர் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அவரை அரசியல் ரீதியாக சந்திப்பேன். அதே நேரத்தில் பா.ஜனதா கட்சிக்குள்ளேயே எனக்கு எதிராக 3 பேர் சதி செய்துள்ளனர். அவர்கள் யார்? என்பது பற்றி தற்போது தெரிவிக்க மாட்டேன்.
அரசியலில் என்னை பழிவாங்குவதற்காக பா.ஜனதாவினர் 3 பேரும் எனக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்களை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. தேவைப்பட்டால் அவர்கள் 3 பேர் யார்? என்பதை பின்னால் தெரிவிப்பேன்.
இவவாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story