மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தஞ்சையில் மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஒப்பாரி வைக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர்:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தஞ்சையில் மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஒப்பாரி வைக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
ஆர்ப்பாட்டம்
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல், கியாஸ் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய, மாநிலஅரசுகளை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
நற்பணி மாவட்ட செயலாளர் தரும.சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சிவ.இளங்கோ கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
விலை உயர்வு
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101-யை தாண்டியுள்ளது. டீசல் விலை உயர்வும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கியாஸ் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஒப்பாரி வைக்க முயற்சி
இதில் நிர்வாகிகள் ரெங்கசாமி, பூமிநாதன், ரமேஷ்குமார், கமல்முருகேசன், கார்த்திக், சுரேஷ், ரெங்கேஸ்வரன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்த முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது.
இதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும், ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்த அனுமதி கிடையாது எனவும், மீறி ஒப்பாரி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து ஒப்பாரி போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story