அனைத்து மனுக்களுக்கும் 2 மாதங்களில் தீர்வு


அனைத்து மனுக்களுக்கும் 2 மாதங்களில் தீர்வு
x
தினத்தந்தி 10 July 2021 8:51 PM GMT (Updated: 10 July 2021 8:51 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் 2 மாதங்களில் தீர்வு காணப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் 2 மாதங்களில் தீர்வு காணப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நலத்திட்ட உதவி 
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 135 பேருக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மேகநாத ரெட்டி முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். 
அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:- 
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அவரிடம் நம்பிக்கையுடன் மனுக்கள் வழங்கினர். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் இந்த மனுக்கள் பெறப்பட்டன.
பதிவேற்றம் 
இந்த மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதற்காக தற்போது சிறப்பு துறை அமைக்கப்பட்டு மனுக்கள் மின்னணு முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 342 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
 இந்த மனுக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அந்தந்த துறை அதிகாரிகளுக்கு பிரித்து தரப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் 50 சதவீத மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கும் அடுத்த 2  மாதங்களில் விரைந்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரண உதவி 
மேலும் மனுக்களை நிராகரிக்க கூடாது என்றும் அதில் ஏதேனும் விவரங்கள் தேவை இருந்தால் மனுதாரர்களை அழைத்து விவரங்களை கேட்டறிந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 முதல்-அமைச்சர் ஏற்கனவே கடந்த மே மாதம்  திருவள்ளூர்,சென்னை, ராணிப்பேட்டை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பெறப்பட்ட 589 மனுதாரர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திலும் அனைத்து மனுதாரர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
 இவ்வாறு அமைச்சர் கூறினார். 
இதில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றி வேந்தன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story