கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் முறைகேடு: பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அலுவலர், ஆய்வாளர் பணியிடை நீக்கம்
பல்லாவரம் நகராட்சி பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக நகரமைப்பு அலுவலர் மற்றும் ஆய்வாளர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி பகுதியில் உள்ள 42 வார்டுகளிலும் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை, ரேடியல் சாலை பகுதியில் பல்வேறு வணிக வளாகங்கள் கட்டப்பட்டு உள்ளது.
ஆனால் இதில் சில கட்டிடங்கள் அனுமதி இன்றி கட்டப்பட்டு வருவதாகவும், விதிமுறைகளை மீறி சில கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தாலும் அதன் மீது பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிர்வாக ஆணையத்துக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.
அதன்படி நகராட்சி நிர்வாக ஆணையம் நடத்திய விசாரணையில் பல்லாவரம் நகராட்சி பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் சேதுராஜன், நகரமைப்பு ஆய்வாளர் பழனிச்சாமி ஆகிய 2 பேரையும் பணியிடைநீக்கம் செய்து நகராட்சி நிர்வாக கமிஷனர் பொன்னையா உத்தரவிட்டார். மேலும் இவர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story