பெரம்பலூரில் உழவர் சந்தை திறப்பு
பெரம்பலூரில் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்:
ஊரடங்கால் மூடப்பட்டது
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை அதிகாரிகள் நிர்ணயித்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பெரம்பலூர் நகர பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை உழவர் சந்தையில் வாங்கி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 24-ந் தேதி அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கினால் பெரம்பலூர் உழவர் சந்தை மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் காய்கறிகளை நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடு தேடிச்சென்று விற்பனை செய்து வந்தனர். பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் பெரம்பலூர் உழவர் சந்தை திறக்கப்படாமல் இருந்தது.
மீண்டும் திறப்பு
இந்நிலையில் 47 நாட்களுக்கு பிறகு நேற்று காலை பெரம்பலூர் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. ஆனால் குறைவான விவசாயிகளே கடைகளை திறந்தனர். எதிர்பார்த்தபடி வியாபாரம் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உழவர் சந்தையின் வெளியே வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் தினமும் மார்க்கெட் வியாபாரிகள் பலர் காய்கறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் வியாபாரிகள் முக்கியமான இடங்களில் சாலையோரங்களில் காய்கறி கடைகள் அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் முன்பு போல் காய்கறிகள் வாங்க உழவர் சந்தையை நாடி வருவதில்லை.
வியாபாரிகளால் பாதிப்பு
அவர்கள் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளிடமும், சாலையோர வியாபாரிகளிடமும் காய்கறிகளை பேரம் பேசி வாங்கி செல்கின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. உழவர் சந்தை காலை முதல் மதியம் வரை தான் செயல்பட அனுமதி. வியாபாரம் இல்லாததால் காலை 9 மணிக்கு உழவர் சந்தையை விட்டு விவசாயிகள் சென்று விடுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலை முதல் மதியம் வரை உழவர் சந்தையின் வெளிப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story