தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெயிண்டர் வெட்டிக்கொலை ஒருதலை காதல் விவகாரமா?
தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பூர்,
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 5-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைதள வீட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 மகன்கள்.
இவர்களில் தங்கம் என்ற தங்கராஜ் (வயது 29) பெயிண்டர் வேலை செய்து வந்தார். தற்போது வேலை ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்து வந்தார். நேற்று மதியம் 3 மணி அளவில் தங்கராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது திடீரென ஒரு பெண் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்து தங்கராஜை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தங்கராஜ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆர்.கே.நகர் போலீசார், கொலையான தங்கராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத், உதவி கமிஷனர் ஆனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலையான தங்கராஜ், அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், இது தொடர்பாக தங்கராஜூக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த ஒருதலை காதல் விவகாரத்தில் தங்கராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து, கொலை தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story