இளம்பிள்ளை அருகே போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற தொழிலாளி சாவு


இளம்பிள்ளை அருகே போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 July 2021 4:15 AM IST (Updated: 11 July 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற தொழிலாளி உயிரிழந்தார்.

இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற தொழிலாளி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தறித்தொழிலாளி
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 32). தறித்தொழிலாளி. இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதனால் கே.கே. நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் வீட்டில் கிளீனிக் நடத்தி வந்த சிவகுமார் என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் காய்ச்சலுக்கு அவரிடம் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டனின் உடல் நிலையில் பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் மணிகண்டனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலி டாக்டர்
இது குறித்து அவரது தம்பி சீனிவாசன் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். அதில் இடங்கணசாலை கே.கே.நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் கிளீனிக் நடத்தி வந்த சிவகுமார் என்பவரிடம் மணிகண்டன் காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் தான், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. மேலும் சிவகுமார் டாக்டருக்கு படிக்க வில்லை, அவர் அலோபதியில் டிப்ளமோ மட்டுமே படித்துள்ளதாக தெரிகிறது. எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மணிகண்டனின் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இடங்கணசாலை கே.கே.நகர் பிரிவு ரோடு பகுதியில் போராட்டம் நடத்த திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லசிவம், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாரிடம், மணிகண்டனின் உறவினர்கள், போலி டாக்டர் சிவகுமாரை கைது செய்தால் தான், உடலை பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் சிவகுமாரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
வலைவீச்சு
இதனிடையே மகுடஞ்சாவடி போலீசார் தலைமறைவாக உள்ள போலி டாக்டர் சிவகுமாரை வலைவீசி தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால் தான், மணிகண்டனுக்கு என்ன ஊசி போட்டார்? அவர் எப்படி இறந்தார்? என்பது போன்ற பல்வேறு விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story