தேவூர் அருகே சொத்து தகராறில் கண்டக்டர் வெட்டிக்கொலை-அண்ணன் வெறிச்செயல்
தேவூர் அருகே சொத்து தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அண்ணன் போலீசில் சரணடைந்தார்.
தேவூர்:
தேவூர் அருகே சொத்து தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அண்ணன் போலீசில் சரணடைந்தார்.
பஸ் கண்டக்டர்
சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள மயிலம்பட்டியை சேர்ந்தவர் தனம் (வயது 60). இவருக்கு சீனிவாசன் (39), சுதாகர் (34) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். லாரி டிரைவரான சீனிவாசனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதேபோல், சுதாகருக்கு கவிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மினி பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் சுதாகர் மது குடித்து விட்டு வந்து, அடிக்கடி தனது தாய் தனத்திடம் சொத்தை பிரித்து கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல் நேற்று காலையும் மது போதையில் தனத்திடம் சொத்தை பிரித்து கேட்டு, அவரை அடித்து, உதைத்துள்ளார்.
அரிவாளால் வெட்டிக்கொலை
அப்போது அங்கிருந்த சீனிவாசன் இதனை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் சுதாகருக்கும், சீனிவாசனுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதனிடையே சுதாகர், சீனிவாசன் கையை கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சீனிவாசன் இதுகுறித்து தேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் அண்ணன், தம்பி 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சுதாகர் மீண்டும் தனது தாய் வீட்டுக்கு சென்று தனத்திடம் சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுதாகரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சுகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
அண்ணன் கைது
இதையடுத்து சீனிவாசன் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் தேவூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் நடந்ததை கூறி, சரணடைந்தார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், இன்ஸ்பெக்டர் குமாரவேல், தேவூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.
தேவூர் அருகே சொத்து தகராறில் தம்பியை, அண்ணன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story