சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம்: தற்காலிக பணியாளர்கள் ஒரு மாதத்தில் நிரந்தரம் செய்யப்படுவார்கள் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் விரைவாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும், 5 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
ஸ்ரீரங்கம்,
சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் விரைவாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும், 5 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நேற்று ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காலையில் வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் சால்வை அணிவித்து மாலை, மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து கருடாழ்வார் சன்னதி வழியாக ரெங்கநாதர் மூலஸ்தானம் சென்ற அமைச்சர் சேகர்பாபு மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்தார். அதன்பிறகு கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமிக்கு பழங்கள் வழங்கினார்.
பின்னர் நெல் கொட்டாரத்தை பார்வையிட்டார். தொடர்ந்து தன்வந்திரி சன்னதி, தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 12 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தாத கோவில்களின் எண்ணிக்கைகளை கண்டறிந்து விரைவில் குடமுழுக்கு நடத்தவும், பல்வேறு மராமத்து பணிகள் நடைபெற தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கோசாலையை சிறப்போடு இன்னும் தூய்மையாகவும் பாதுகாப்புடனும் பராமரிக்க அறிவுறுத்தி உள்ளேன். கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பசுக்கள் தானம் வருவதால் ஆகம விதிப்படி திருக்கோவில் உள்ளேயே ஒரு கோசாலை அமைக்கவும், கோவிலுக்கு அருகே உள்ள இடத்தில் ஒரு கோசாலை அமைக்கலாம் என்ற கருத்து உள்ளது. இதுகுறித்து துறையின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு அதற்கு உண்டான பணிகள் மேற்கொள்ளப்படும்.
பணி நிரந்தரம்
கடந்த ஆட்சியில் போகின்ற போக்கில் 2015-ம் ஆண்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணி அமர்த்தப்படுவர் என கூறினர். அதன்பின் 110 அறிக்கையின் கீழ் 2020-ம் ஆண்டு நிரந்தர பணி உத்தரவு வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை செய்யவில்லை.
இதையறிந்த தமிழக முதல்-அமைச்சர், 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணி புரிந்த அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக மாற்ற உத்தரவிட்டுள்ளார். ஒரு மாத காலத்திற்குள் 5 ஆண்டுகள் பணி புரிந்தவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க உள்ளோம். இவர்களை பணிநிரந்தரம் செய்த பிறகு மீதமுள்ள காலி பணியிடங்களில் மற்றவர்கள் பணியமர்த்தும் பணிகள் செயல்படுத்தப்படும்.
கோவில் சிலைகள்
கோவில்களில் சிலைகள் மாயமான வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் இடங்களில் கடைகள், குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. குடியிருப்பவர்கள் உரிய மனு அளித்தால் வாடகைதாரராக ஏற்றுக் கொள்ளப்படும். இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 330 ஏக்கரில் குடியிருப்பவர்கள், கடை நடத்துபவர்கள் வாடகை செலுத்தினால் கோவிலுக்கும் பல்வேறு நல்ல காரியங்களை செய்வதற்கும் ஏற்றதாக இருக்கும். எனவே அனைவரும் வாடகை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டியவர்களை உடனடியாக பரிந்துரை செய்ய கேட்டுக் கொண்டுள்ளோம். ஸ்ரீரங்கம் கோவில் சார்ந்த உப கோவில்களில் தொல்லியல் துறை அனுமதி பெற்று அனைத்து கோவில்களிலும் விரைவில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சிவராசு, பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
சமயபுரம் கோவில்
பின்னர் அமைச்சர் சேகர்பாபு சமயபுரம் கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து பக்தர்கள் கியூ காம்ப்ளக்ஸ், முடிமண்டபம், சமையல் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த அவர், எவ்வளவு திட்ட மதிப்பீடு, அதில் அரசின் பங்கு, நன்கொடையாளர்களின் பங்கு என்ன என்பதை கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் கேட்டார். தொடர்ந்து திருவெள்ளறை கோவிலிலும் அவர் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு சமயபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
விரைவில் கும்பாபிஷேகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் ராஜகோபுரம் கட்டும் பணி முடிந்து விரைவாக கும்பாபிஷேகம் நடத்தப்படும். இந்த கோவிலின் கட்டுப்பாட்டிலுள்ள முக்தீஸ்வரர்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்தக்கோவில் மற்றும் மாகாளிகுடியிலுள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவிலும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
தற்போது தினமும் சுமார் 400 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதிக அளவில் பக்தர்கள் வருவதால் மூன்று வேளை அன்னதானம் வழங்குவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Related Tags :
Next Story