வெளிநாடுகளில் உள்ள அனைத்து சிலைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி
வெளிநாடுகளில் உள்ள அனைத்து சிலைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சிக்கல்,
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் பெண்கள் உயர்நிலைபள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பள்ளி நிர்வாகத்தினர், அமைச்சரிடம், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஆய்வுகூடம், கழிவறை, விளையாட்டு திடல் உள்ளிட்டவை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது நாகை மாலி எம்.எல்.ஏ. நாகை கலெக்டர் அருண் தம்புராஜ், இந்து சமய அறநிலையத்துறை. கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் ராணி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன். அதன்படி கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் பெண்கள் உயர்நிலைபள்ளியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 1,000 பேர் படித்துள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 600 ஆக குறைந்துள்ளது. போதிய அடிப்படை வசதி இல்லாததால் தான் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
பள்ளி நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதேபோல தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதை அடையாளம் கண்டுள்ளோம். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெளிநாடுகளில் உள்ள அனைத்து சிலைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story