கொள்ளிடம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது
கொள்ளிடம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடியோ கேமராவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொள்ளிடம்,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவது தொடர்ந்து நடந்து வந்தது. மோட்டார் சைக்கிள்களை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கொள்ளிடம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த திருலோகச்சந்தர் மகன் ராஜீவ்காந்தி (வயது20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோர் கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், புதுப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜீவ்காந்தி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளிடம் ெரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டூடியோவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு திருடப்பட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வீடியோ கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மேலும் பல மோட்டார் சைக்கிள்களை திருடி உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிள்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீசார், இவர்களுடன் கூட்டு வைத்திருந்த நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story