மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்


மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 11 July 2021 5:47 PM IST (Updated: 11 July 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

திருப்பூர்
திருப்பூர் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.
மொத்த விற்பனை
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு ஊரடங்கு அறிவித்தது. தொற்று குறைவு காரணமாக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளுக்கு படையெடுப்பது வழக்கம். ஊரடங்கில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திருப்பூர் திரும்பி வரும் நிலையில், மீன் மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சில்லறை விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதிகாலை 5 மணி வரை தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
 கூட்டம்
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கடந்த வாரத்திலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் வந்து ஒழுங்கு படுத்தினார்கள். அதுபோல் நேற்று காலையும் தெற்கு போலீசார் மீன் மார்க்கெட்டுக்கு வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்கள். பின்னர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் வரதராஜன் தலைமையில் போலீசார் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர்.
பொதுமக்கள் அதிக அளவில் மீன் வாங்க வந்தனர். இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் மீன் மார்க்கெட்டில் வியாபாரம் நிறுத்தப்பட்டது. மீன் கடைகளை அடைக்க போலீசார் உத்தரவிட்டனர். இருப்பினும் ஏ.பி.டி. ரோடு செல்லும் பாலம் அருகே ரோட்டோரம் மீன் விற்பனை நடைபெற்றது. அங்கு பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கிச் சென்றதையும் காணமுடிந்தது.
காய்கறி மார்க்கெட்
இதுபோல் பார்க் ரோடு, ராயபுரம், அவினாசி ரோடு குமார் நகர், காங்கேயம் ரோடு சி.டி.சி. கார்னர் அருகில் உள்ள மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முக கவசம் அணிந்து வாடிக்கையாளர்கள் வர வேண்டும் என்று கடைக்காரர்கள் அறிவுறுத்தினார்கள். இதுபோல் இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட், உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல்லடம் ரோட்டில் இருபுறமும் வியாபாரிகள் காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகளை அமைத்திருந்தனர். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு போலீசார் தொடர்ந்து பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
-




Next Story