தஞ்சையில் கார் மெக்கானிக் தற்கொலை - போலீசார் விசாரணை
தஞ்சையில் கார் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பள்ளத்தான்மனை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது 49). இவருடைய மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.இளஞ்செழியன் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அஜிஸ் நகர் 5-ம் தெருவில் சொந்தமாக கார் மெக்கானிக் கடை வைத்திருந்தார். இதனால் அவர் பெரும்பாலும் அந்த கடையிலேயே தான் தங்கியிருந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்றுகாலை இளஞ்செழியன், கார் மெக்கானிக் கடையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.
இதை கடைக்கு எதிர் வீட்டில் வசித்து வருபவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.பின்னர் தூக்கில் பிணமாக தொங்கிய இளஞ்செழியன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இளஞ்செழியனின் மனைவி சுகந்தி தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வயிற்றுவலி காரணமாக இளஞ்செழியன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story