ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ராஜவாய்க்கால் குப்பை
மடத்துக்குளம் பகுதியில் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ராஜவாய்க்கால் குப்பை மற்றும் கழிவுகளால் பாழாகி வருகிறது. அவற்றை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ராஜவாய்க்கால் குப்பை மற்றும் கழிவுகளால் பாழாகி வருகிறது. அவற்றை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகள்
நீர்நிலைகள் பராமரிப்பில் தொடர்ந்து காட்டப்படும் அலட்சியத்தின் விளைவு விவசாயத்தில் மிக மோசமாக பிரதிபலிக்கும். அத்துடன் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுகள் என்று பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.
ஆனாலும் பல இடங்களில் நீர்நிலைகள் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது. அந்தவகையில் மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட பல கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து பாசன நீரைக் கொண்டு வரும் பாசன வாய்க்காலான ராஜவாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
பாழாகும் விளைநிலங்கள்
குறிப்பாக மடத்துக்குளம் ரெயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் வாய்க்காலையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டுள்ளது.அத்துடன் பல இடங்களில் இந்த வாய்க்காலில் குப்பைகள் வீசியெறியப்படுகிறது.இதனால் அங்கங்கே பிளாஸ்டிக் காகிதங்கள், பாட்டில்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் மாசுபடுவதுடன் கொசு உற்பத்தியும் அதிகரிக்கிறது.
ஆகாயத்தாமரைகளின் ஆக்கிரமிப்பால் நீரோட்டத்தில் தடை ஏற்படுவதுடன் பெருமளவு தண்ணீர் வீணாகிறது.மேலும் சில பகுதிகளில் இந்த வாய்க்காலில் சாக்கடைக்கழிவு நீரைக் கலந்து விடுகின்றனர்.இதனால் நீர் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்த் தொற்றுகள் பரவவும் காரணமாகிறது.மேலும் இந்த கழிவுகள் அனைத்தும் கடைசியாக சென்று சேருமிடம் விளைநிலங்களாகும்.இதனால் விளைநிலங்கள் பாழாவதுடன் விவசாயிகளுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றன.
தூர்வார நடடிக்கை
எனவே ராஜவாய்க்காலிலுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகளை முறையாகத் தூர்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கழிவுகள் மற்றும் குப்பைகளை ராஜவாய்க்காலில் கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடல் மாதா, காவிரித்தாய் என்று நீர் நிலைகளுக்கு தாய்க்கு இணையான இடத்தை நாம் கொடுத்துள்ளோம்.அத்தகைய நீர்நிலைகளைக் காப்பது ஒவ்வொருவருடைய கடமையுமாகும் என்பதை உணர்ந்து நீர்நிலைகளைப் பாழாக்கும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
Related Tags :
Next Story