கேரள மருத்துவரின் ‘அபூர்வ ஹோயா தோட்டம்’
உலகம் முழுவதும் புகழ்பெற்ற தோட்டப் பயிராக ஹோயா விளங்குகிறது. கேரளாவில் அரிதான இந்த தாவரத்தின் 140 வகைகளை தமது மலபுரம் தோட்டத்தில் வளர்த்து வருகிறார் பார்வதி.
கோட்டக்கல் அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பார்வதியும் அவரது கணவர் டாக்டர் கிரதமூர்த்தியும் ஹோயா வளர்ப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் பார்வதி, “ஹோயா தாவரங்கள் ஊடுபயிராகும். அதன் பூக்கள் மெழுகால் செய்யப்பட்டது போன்று தோற்றமளிக்கும். எனவே, இதற்கு மெழுகு ஆலை என்று பெயர். அதன் நிறமும் மணமும் மாறுபட்டதாக இருக்கும்.
தாய்லாந்தில் ஹோயா தாவரம் வளர்ப்பதற்காக பிரத்யேக தோட்டங்கள் உள்ளன. ஹோயாவின் மாறுபட்ட வகை தாவரங்கள் பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளன. இமயமலைப் பகுதியில் ஹோயா வளர்க்கப்படுகிறது. அதோடு மணிப்பூர் மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரியில் இந்த அரிய வகை ஹோயா தாவரம் வளர்கிறது.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஹோயா தாவரத்தை வளர்ப்பது குறித்த வீடியோவை சுவிஸ் வீடியோ சேனலில் பார்த்தோம். இது குறித்து விசாரித்தபோது, ஹோயா தாவரம் கேரளாவிலேயே கிடைப்பது தெரியவந்தது. கொச்சியில் உள்ள சஹ்யாத்ரி ஹோயா தோட்டத்தில் சில வகை ஹோயா தாவரங்களை வாங்கினோம். மற்ற வகைகளை வெவ்வேறு இடங்களிலிருந்து சேகரித்தோம்” என்றார்.
இது குறித்து லக்னோவில் உள்ள தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி டாக்டர் பிரபுகுமார், “140 ஹோயா தாவர வகைகளை வளர்ப்பது என்பது பெரிய விஷயம். உலகம் முழுவதுமே 534 வகை ஹோயா தாவரங்கள் மட்டுமே உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் படிப்புக்காக கேரள மருத்துவரின் ஹோயா தோட்டத்தை இனி அணுகலாம்” என்றார்.
ஹோயா தாவரம் ஒன்றின் விலை ரூ. 250 தொடங்கி ரூ.3,500 வரை உள்ளது. அசாம், ஷில்லாங் மற்றும் கொல்கத்தாவிலிருந்து ஹோயா தாவரங்களை டாக்டர் பார்வதி வாங்கியுள்ளார். இதுதவிர, மாறுபட்ட வகை ஹோயா தாவரத்தை வாங்க வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோயா மலர்களைப் பயன்படுத்தி முகப்பவுடர், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story