களைகட்டிய மக்கள் கூட்டம்
ஊரடங்கு தளர்வால் சகஜ நிலைக்கு திருப்பூர் திரும்பியது. மக்கள் கூட்டத்தால் கடைவீதிகள் களைகட்டியது.
திருப்பூர்
ஊரடங்கு தளர்வால் சகஜ நிலைக்கு திருப்பூர் திரும்பியது. மக்கள் கூட்டத்தால் கடைவீதிகள் களைகட்டியது.
ஊரடங்கில் தளர்வு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதிலிருந்து திருப்பூர் மாநகரம் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாநகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் அன்று தங்கள் தேவைக்கான பொருட்களை கடைவீதிகளுக்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
கடைவீதிகள் களை கட்டியது
அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் நேற்று வட மாநில தொழிலாளர்கள் மற்றும் பனியன் நிறுவன தொழிலாளர்கள் அதிகம் பேர் கடைவீதிகளை நோக்கி படையெடுத்தனர். திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் உள்ள பேன்சி கடைகள், ஜவுளி கடைகள் மற்றும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மாநகராட்சி அலுவலக சந்திப்பு, பழைய பஸ் நிலையம், பார்க் ரோடு பகுதிகளில் ரோட்டோரம் பேன்சி கடைகள், பழக்கடைகள் என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தொழிலாளர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கி சென்றார்கள். இதன்காரணமாக கடைவீதிகள் களைகட்ட தொடங்கியது.
காதர்பேட்டை பனியன் கடைகள்
திருப்பூர் மாநகரம் பழைய நிலைக்கு திரும்பியதை நேற்று காண முடிந்தது. மாநகரின் பிரதான சாலைகளில் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.
திருப்பூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் பயணிகள் வருகை அதிகமாக இருந்ததை தொடர்ந்து கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.
இதுபோல் காதர் பேட்டை பனியன் விற்பனை கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நேற்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து ஆடைகளை வாங்கி சென்றார்கள். ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த மக்களுக்கு நேற்றைய ஞாயிற்றுக்கிழமை புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைவீதிகளில் விற்பனை களை கட்டியது. ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
----
Reporter : M.Sivaraj Location : Tirupur - Tirupur
Related Tags :
Next Story