தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு


தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 11 July 2021 8:59 PM IST (Updated: 11 July 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் நேரில் ஆய்வு செய்தார்.

தர்மபுரி:

போக்குவரத்து நெரிசல்
தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டவுன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, சின்னசாமி நாயுடு தெருவில் கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்திய போது வணிகர்களுக்கும், போலீசாருக்கும் இடைேய வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வணிகர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தர்மபுரி 4 ரோடு, பென்னாகரம் ரோடு, ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமது அலி கிளப் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் நடந்து சென்று திடீர் ஆய்வு நடத்தினார். போக்குவரத்து நெரிசலை தடுக்க எந்தந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்க வேண்டும். முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களை எந்தந்த பகுதிகளில் நிறுத்த வேண்டும். நகரில் உள்ள முக்கிய சாலைகளை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது குறித்து டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தினார்.
வணிகர்கள் புகார்
சின்னசாமி நாயுடு தெருவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தியபோது, மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்திலிங்கம், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நடராஜன், சக்திவேல், கோபால், பிரதீப்குமார், நகர நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட வணிகர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்துவதில் போலீசார் அத்துமீறி செயல்படுவதாக புகார் தெரிவித்தனர். 
அப்போது போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், இந்த பிரச்சினையை இதோடு விடுங்கள். தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வணிகர்கள் ஆலோசனை கூறுங்கள். உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
=======

Next Story