சிவகளை அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சிவகளை அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ஏரல்:
சிவகளை அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அகழாய்வு பணிகள்
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை, கொற்கையில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், எலும்புகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் போன்றவை கண்டறியப்பட்டன.
பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறியும் வகையில் நடத்தப்பட்ட அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு, சங்கு தொழிற்கூடம் போன்றவை கண்டறியப்பட்டன.
அமைச்சர்கள் ஆய்வு
இந்த நிலையில் தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி., ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களையும் பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றங்கரை
வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை கீழடி அகழாய்வு எடுத்துக்காட்டுவது போன்று, தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை சிவகளையில் நடைபெறும் அகழாய்வு உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.
இங்கு பழங்கால மக்களின் வாழ்விடங்கள், ஈமச்சடங்கு நடைபெற்ற இடங்கள் போன்றவை கண்டறியப்பட்டு உள்ளன. இங்கு கருப்பு, சிவப்பு நிற மண்பாண்டங்கள், வெள்ளை நிற பானைகள், கிண்ணங்கள், செப்புக்காசுகள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள், இரும்பிலான பொருட்கள், சுடுமண் சிற்பங்கள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன.
இரும்பு காலம்
மத்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையில், அங்கு வசித்த பழங்கால தமிழர்களின் நாகரிகம் கி.மு. 650 முதல் கி.மு. 750-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சிவகளையில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம், ஆதிச்சநல்லூரை விடவும் தொன்மை வாய்ந்ததாக இருக்கலாம். அந்த காலகட்டத்தை கண்டறியும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களில் நெல்மணிகள் மிக முக்கியமானதாகும். இங்கே கிடைத்துள்ள மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்ட பொருட்கள் ஆய்வுக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இரும்பு காலம் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் இங்கு இருந்திருக்கக்கூடும்.
பொதுமக்களின் பார்வைக்கு...
சிவகளை தாமிரபரணி ஆற்றின் ஒரு அடையாள சின்னம். இங்கு ஓரிடத்தில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் வெளிவந்தவுடன் தமிழ்நாட்டில் சிவகளை ஒரு முக்கிய இடமாக இருக்கும். தமிழக அரசு சிவகளையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும்.
இங்கு அகழாய்வில் கிைடத்த பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்து கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஆய்வு கூட்டம்
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழில் துறை வளர்ச்சி குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கனிமொழி எம்.பி
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில், ‘தமிழகத்திலேயே வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத அளவுக்கு வசதிகள் கொண்ட மாவட்டம் தூத்துக்குடி. சில தொழிற்சாலைகள் வரவில்லையென்றால், அதற்கான காரணத்தை அறிந்து அதனை சரி செய்ய முடிந்தால் சரி செய்ய வேண்டும். அனைவரும் சிறிய பிரச்சினையாக இருந்தாலும், கவனத்துக்கு கொண்டு வந்து சரிசெய்தால், விரைவில் தூத்துக்குடியை வளர்ச்சிப்பாதையில் செல்லும் மாவட்டமாக, வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் மாவட்டமாக மாற்ற முடியும்’ என்று கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
அனைத்து வளங்களும் கொண்ட மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. இங்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சரக்கு பெட்டகங்கள் மாற்று முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். விளாத்திகுளத்தில் ஜவுளி பூங்கா உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தை எல்லா வகையிலும் தொழில் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, கோவைக்கு அடுத்து தூத்துக்குடியில் டைடல் பார்க் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், ‘ஜவுளிப்பூங்கா, பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத்தின் வறண்ட பகுதியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனையும் அமைத்து தர வேண்டும்’ என்றார்.
கன்னடியன் கால்வாய்
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசுைகயில், ‘கன்னடியன் கால்வாயில் இருந்து அமைக்கப்படும் கால்வாய் எங்கு தொடங்கப்படுகிறது, எங்கே முடிகிறது என்பதை விளக்க வேண்டும். உடன்குடி பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்புநீராக மாறி வருகிறது. ஆகையால் கன்னடியன் கால்வாயை உடன்குடி வரை கொண்டு வர வேண்டும். மாவட்டத்தில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சி பெறும் வகையில் மாசற்ற தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் பிச்சை, தூத்துக்குடி சிப்காட் திட்ட அலுவலர் லியோ வாஸ், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அண்ணாத்துரை, சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, மாநகர செயற்பொறியாளர் சேர்மக்கனி, தூத்துக்குடி மாநகர நல அலுவலர் வித்யா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய்நாராயணன் நன்றி கூறினார்.
முன்னதாக சமூக நலத்துறை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு 2 பெற்றோர்களையும் இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலைகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
Related Tags :
Next Story