சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்


சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 11 July 2021 9:37 PM IST (Updated: 11 July 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்:
கொரோனா பரவல் காரணமாக மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தடை நீக்கப்பட்டு கடந்த 5-ந்தேதி முதல் சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
இதனிடையே வார விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிக அதிக அளவில் இருந்தது. குறிப்பாக நேற்று ஏராளமான இருசக்கர வாகனங்களில் வாலிபர்கள் குவிந்தனர். அத்துடன் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
இந்நிலையில் நேற்று அதிகாலை முதலே பலத்த காற்றுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது. பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் பிற்பகல் முதல் சாரல் மழை குறைந்தது. எனினும் மாலை வரை பலத்த காற்று தொடர்ந்து வீசியது. 
இதில் வத்தலக்குண்டு சாலையில் பூலத்தூர் பிரிவு அருகே மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் பலமுறை மின்சாரம் தடைபட்டது.

Next Story