1½ வயது குழந்தை கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட பயங்கரம்
பனப்பாக்கம் அருகே செல்போன் தகராறில் 1½ வயது குழந்தை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தையின் பெரியப்பாவை போலீசார் கைது செய்தனர.
நெமிலி
பனப்பாக்கம் அருகே செல்போன் தகராறில் 1½ வயது குழந்தை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தையின் பெரியப்பாவை போலீசார் கைது செய்தனர்.
நிறைமாத கர்ப்பிணி
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 27). இவரும் அதே பகுதியில் உள்ள சிறுவளையம் கிராமத்தை சேர்ந்த கனிமொழியும் (21) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கபிலேஷ் (1½) என்ற மகன் உள்ள நிலையில், தற்போது கனிமொழி கர்ப்பம் தரித்தார். நிறைமாதம் ஆனதையொட்டி கனிமொழியை கபிலேசுடன் சிறுவளையத்தில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு ஆறுமுகம் அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு கனிமொழி, அவரது தாயார் லட்சுமி, கனிமொழியின் அக்காள் காயத்ரி, காயத்ரியின் கணவர் பிரசாந்த் ஆகியோர் ஒரே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
கதறல்
இரவு 11 மணியளவில் குழந்தை கபிலேஷ் திடீரென கதறும் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து பார்த்தனர். அப்போது குழந்தை ரத்த காயத்துடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
உடனடியாக கபிலேசை புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே கபிலேஷ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
குழந்தை இறப்பில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் நெமிலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் விரைவு
அதன் அடிப்படையில் நெமிலி, அரக்கோணம் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் குழந்தை கபிலேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
வேலூரில் இருந்து மோப்ப நாய் "சிம்பாவை" வரவழைத்து சம்பவ இடத்தில் மோப்பம் பிடிக்க விட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை தொடங்கினர்.
தனித்தனியாக விசாரணை
மேலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தனர். கனிமொழியின் அக்காளான காயத்ரியின் கணவர் பிரசாந்த்திடம் விசாரணை ெசய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததார்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவரை நெமிலி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பரபரப்பான தகவல்கள் தெரியவந்தன. செல்போன் பயன்படுத்துவதில் கனிமொழிக்கும் பிரசாந்துக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கனிமொழியின் தாயார் லட்சுமி, மகளுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், கனிமொழியை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கல்லை கொண்டு வந்துள்ளார்.
ஆனால் கையில் இருந்த கல் கபிலேஷ் மீது தவறி விழுந்ததில் அவன் இறந்தது தெரியவந்தது.
கொலை வழக்கு
இதனையடுத்து பிரசாந்த் மீது நெமிலி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடநது வருகிறது. செல்போன் தகராறில் 1½ வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story