ஏமப்பேர் குளக்கரையில் நடைபாதையுடன் பூங்கா கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு உத்தரவு


ஏமப்பேர் குளக்கரையில் நடைபாதையுடன் பூங்கா  கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 11 July 2021 10:45 PM IST (Updated: 11 July 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள ஏமப்பேர் குளக்கரையில் நடைபாதையுடன் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்

கள்ளக்குறிச்சி

தூர்வார வேண்டும்

கள்ளக்குறிச்சி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏமப்பேர் குளப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். 
அப்போது குளத்தில் உள்ள செடிகளை அகற்றி குளத்திற்கு நீர் வரத்து மற்றும் வெளியேற்று வாய்க்கால்களை உடனடியாக தூர் வாரிடவும், குளத்தின் கரைப்பகுதியில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைப்பதற்கு முதற்கட்ட பூர்வாங்க பணிகளை தொடங்க தேவையான திட்ட அறிக்கையை தயார் செய்து பணியை விரைவில் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உரம் தாயாரிக்கும் மையம்

இதைத் தொடர்ந்து நகராட்சி மயான பகுதியில் ஆய்வு செய்த அவர் மயானத்தின் உட்புறத்தில் பூச்செடிகள் நட்டு பராமரிக்கவும், வெளிப்புறம் சிறு சாலை ஓர பூங்காக்கள் அமைத்து பராமரிக்கவும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். 
பின்னர் துருகம் சாலைப் பகுதியில் நுண் உரம் உற்பத்தி மையத்தை ஆய்வுசெய்த கலெக்டர் ஸ்ரீதர் இங்கு தயாரிக்கப்படும் நுண் உரத்தை விவசாயத்துக்கு பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகரிகளிடம் கூறினார். மேலும் 14-வது வார்டுக்குட்பட்ட ஏமப்பேர் தெரு, 12-வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் தெருவில் வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் தூய்மைப்பணியையும் அவர் ஆய்வு செய்தார்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

நகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனைகளில் உபயோகமற்ற டயர், பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்காமல் பராமரித்திடவும், செடி, கொடிகளை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் வீட்டு உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பாக உரிய அறிவிப்பு வழங்க வேண்டும்.  பருவ மழைக்காலம் நெருங்கி வருவதாலும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் பொதுமக்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை கழிவு நீர் வாய்க்காலில் கொட்டாமல் குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் குமரன், பொறியாளர் பாரதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் இருந்தனர்.


Next Story