கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக குவிந்த பொதுமக்கள்
கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
கடலூர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்பட பல்வேறு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். தற்போது சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் மீனவர்களை தவிர மற்ற மீன்வர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல் நேற்றும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். மீனவர்கள் வலையில் மத்தி, கவளை, சங்கரா, வஞ்சிரம், இறால் போன்ற மீன்கள் சிக்கின.
அந்த மீன்களை மீனவர்கள் துறைமுகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் மீன்களை ஏலம் எடுத்து, வாங்கிச்சென்றனர். வியாபாரிகளும் போட்டி போட்டு மீன்களை வாங்கினர்.
பொதுமக்கள் குவிந்தனர்
இதனால் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது. ஆனால் இதில் சிலர் முக கவசம் அணியாமலும் வந்து மீன்களை வாங்கினர். சமூக இடைவெளி என்பது இல்லை.
ஏற்கனவே மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், முக கவசம் அணியாமல் செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமை போன்ற காரணங்களால் மீண்டும் அதிக அளவில் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் இருந்ததை பார்க்க முடிந்தது.
Related Tags :
Next Story