கண்மாயில் கிராவல் மணல் அள்ள விவசாயிகள் எதிர்ப்பு


கண்மாயில் கிராவல் மணல் அள்ள விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 July 2021 6:03 PM GMT (Updated: 11 July 2021 6:03 PM GMT)

கீழடி அருங்காட்சியகத்துக்கு கண்மாயில் கிராவல் மணல் அள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருப்புவனம்,

கீழடி அருங்காட்சியகத்துக்கு கண்மாயில் கிராவல் மணல் அள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அருங்காட்சியகம்

திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்து உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்படும் பழங்கால பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கொந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.12.21 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிட சுற்றுப்பகுதி பரப்புவதற்கு கிராவல் மணல் தேவைப்படுவதால், திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த காஞ்சிரங்குளம் கண்மாயில் கிராவல் மணல் எடுப்பது என திட்டமிட்டது. இதற்காக மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் திருப்புவனம் தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கீழடி கட்டுமானம்), உதவி பொறியாளர் சிங்காரவேலன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காஞ்சிரங்குளம் கிராமத்திற்கு சென்றனர்.

விவசாயிகள் எதிர்ப்பு

அங்குள்ள விநாயகர் கோவிலில் அமர்ந்து அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அது சமயம் கிராம மக்கள், விவசாயிகள் சேர்ந்து கண்மாயில் கிராவல் மணல் அள்ளக் கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் எவ்வளவு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதில் முடிவு எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இது குறித்து கிராம விவசாயிகள் கூறும்போது:-
காஞ்சிரங்குளம் கண்மாய் 150 ஏக்கர் பாசன வசதி உள்ளது. ஆண்டு முழுவதும் நெல் விவசாயம் நடைபெறும் பகுதி என்றாலும் கண்மாயில் தேங்கும் தண்ணீரை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறோம்.

வாழ்வாதாரம் பாதிக்கும்

தற்சமயம் தண்ணீர் செல்லும் மடை பகுதி சரியாக உள்ளதால் மழை பெய்து தேங்கி இருக்கும் தண்ணீர் வயல்களுக்கு சிரமமின்றி செல்கின்றது. ஆனால் கிராவல் மணல் அள்ளினால் கண்மாய் பள்ளமாகவும் மடை பகுதி மேடாகவும் மாறிவிடும். பின்பு மடையில் தண்ணீர் செல்லாத சூழ்நிலை உருவாகும். விவசாயம் பாதிக்கப்பட்டால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எங்கள் கண்மாய்க்கு வைகை ஆற்று தண்ணீர் வரும் வழித்தடங்கள் தூர்ந்து போய் உள்ளதால் தண்ணீர் எங்கள் கண்மாய்க்கு வருவதில்லை. நிலையூர் கால்வாயில் இருந்து சோளங்குருணி கண்மாய் வழியாக தண்ணீர் திறந்து விட்டால் எங்கள் கண்மாய்க்கு தண்ணீர் விரைவில் வந்துவிடும். ஆனால் அதிகாரிகள் எங்கள் கோரிக்கைபடி தண்ணீர் அனுப்ப மறுப்பதால் எங்கள் கண்மாய்க்கு தண்ணீர் சரிவர வருவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story